TNPSC குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி?

TNPSC குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி?




     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்துள்ள முறைகேடு சம்பவம் தமிழகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவா்களில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பிடித்தனர். சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர். ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.


   கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும், 15 பேர் மாநிலங்கள் அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல் 40 பேரையும் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்த தோ்வாணையம், சம்பந்தப்பட்ட தோ்ச்சி பெற்ற நபா்களுக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி, தரவரிசையில் மாநில அளவில் முதல் சுமாா் 40 பேரிடம், கடந்த கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள், ராமேசுவரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது. மேலும் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் குரூப் 4 முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.24) விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




  அவர்களிடம் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதன்மை பெற்றது எப்படி என இருவரிடம் விசாரணை தொடங்கிய சிபிசிடி போலீஸார், அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் 100 இடங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் வேறு 39 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுள்ளதாகவும், இதுதொடர்பாக புதிய பட்டியல் வெளியிடவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது. மேலும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளது எனவும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


     குரூப் 4 முறைகேடு நடந்தது எப்படி? இந்த முறைகேடு எப்படி நடந்துள்ளது என்ற விசாரணையில் பல அதிர்ச்சியளிக்கக் கூடிய விசித்திரமான தகவல் வெளியாகி உள்ளது. மேற்கண்ட 2 தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 99 இடைத்தரகர்களின் ஆலோசனைப்படி, பேப்பரில் எழுதியவுடன் சிலமணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையிலான பேனாவை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வு எழுதியது அம்பலமாகி உள்ளது. தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த 52 பேரின் துணையுடன் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். தேர்வு முடிந்ததும் இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டு இருந்த 52 பேர் உதவியுடன் அந்த விடைதாள்களை எழுத்து மறையக்கூடிய மையினால் எழுதிய விடைகளை திருத்தி உள்ளனர். பின்னர் அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்து அனுப்பியுள்ளனர். இதன்படியே 39 தேர்வர்கள் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைக் கள ஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், ராமேசுவரம் மற்றும் கீழக்கரை ஆகிய மையங்களில் மட்டுமே இந்த முறைகேடு நடைபெற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த மையங்களிலும் எந்த தவறும் நடைபெற வில்லை என டிஎன்பிஎஸ்சி உறுதியாக தெரிவித்துள்ளது.




   சம்மந்தப்பட்ட தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை செய்யப்பட்டுள்ளது. வரும்காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகள் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டியது தான் அவசர, அவசியம் என்றாலும் தொடர்ந்து இதுபோன்ற முறைகேடுகள் நடந்து வருவது உண்மையாக தேர்வுக்கு படிப்பவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் முறைகேடுகள் இல்லாத, நியாயமான தேர்வுகள் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? என்ற எதிர்பாப்பும் எழுந்துள்ளது.

        வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது.

v


     அழையக்கூடிய மை இடைத்தரகர்கள் அளித்த, அழையக்கூடிய மை கொண்ட பேனாவால் தேர்வர்கள் தேர்வை எழுதியுள்ளனர். விடைகளை குறித்துத்தந்ததும் சில மணி நேரங்களில் அவை அழியக்கூடிய மையில் தேர்வர்கள் தேர்வெழுதினர். தேர்வு பணி ஊழியர்கள் துணையோடு, இடைத்தரகர்கள் சரியான விடையை விடைத்தாளில் எழுதியுள்ளனர். இவ்வகையில் குரூப் 4 தேர்வில் மோசடி நடைபெற்றுள்ளது.


   தொடர் விசாரணை 14 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திட்டிருப்பதை அடுத்து இதனை சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கீழக்கரை, உள்பட 9 மையங்களில் தேர்வு எழுதியவர்கள், பணியில் இருந்தவர்களை விசாரிக்க முடிவு செய்துள்ளது.


Post a Comment

0 Comments